வியாழன், 6 செப்டம்பர், 2012


திருமலையில் தமிழ் மக்களின் மனங்களை குழப்ப அரச தரப்பு எடுத்த முயற்சி தோற்கடிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில், குறிப்பாக மூதூர் பிரதேசத்தில் அரச தரப்பினர் சூட்சுமமான முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று மிகவும் முனைப்பான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பல்வேறு கிராமங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ஷ உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும், வேட்பாளர்களும் சில அடிவருடிகளின் உதவியுடன் இம் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது பெருந்தொகையான பணப் பொதிகளும் கைமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழ் கிராமங்களுக்கு விஜயம் செய்து தண்ணீர் தாங்கிகள், ரொக்கப் பணம் என்பவற்றை கொடுத்து வாக்களர்களின் மன நிலையில் குழப்பத்தினை உண்டு பண்ணி வாக்குகளை கபளீகரம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண சபை திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கு.நாகேஸ்வரனின் அதி தீவிரமான பதில் பிரசார நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அவர்களின் வாக்கு அபகரிப்புத்திட்டம் தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஜிரோ மற்றும் இதர சொகுசு வாகனத் தொடரணி மூலம் வந்த அரச தரப்பினர் குறுகிய நேரத்தில் பல்வேறு வீடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின், கிழக்கு மாகாண வேட்பாளர் கு.நாகேஸ்வரன் தலைமையில், கிராமத்து இளைஞர்கள் மற்றும் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரின் உதவியுடன், அரசதரப்பு விஜயம் செய்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு, மீள்விஜயம் செய்து அரசின் சூழ்ச்சிகளுக்கு குழப்பமடையாது எமது கொள்கையில் தெளிவாக இருப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியுள்ளனர்.
பல குழுக்களாக பிரிந்து சென்று நள்ளிரவு வரை மீள்பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் மக்கள் குழப்பமடையாமல் இருப்பதன் அவசியமும் உணர்த்தப்பட்டுள்ளது. சம்பூர் இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம், மூதூர் மூன்றாக் கட்டை மலையடிவாரத்தில் மக்களின் எதிர்ப்பினை பொருட்படுத்தாது பௌத்த சிலை வைக்கும் முனைப்பு, பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இடம்பெறும் நிலஅபகரிப்பு என்பவற்றை தடுத்து நிறுத்தி எமது உரிமைகளை காக்க ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணத்தால் வேட்பாளர் நாகேஸ்வரனுக்கு பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்பு அரசியலில் இருந்து ஒதுங்குமாறு கூறி மிகவும் மோசமான முறையில் வேட்பாளர் நாகேஸ்வரன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் தற்போது திருகோணமலை மாவட்டம் முழுவதும், தமிழ் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர். தமது வாக்குகளை ஆயுதமாக மாற்றி போராடுவதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.
அரசின் இயலாமையின் உச்சக் கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் துரைரசசிங்கம் அவர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய விடாமல் இரவோடு இரவாக அவரது இல்லத்திற்கு பூட்டுப் போட்டு மூடியது முதல், ‘நீலப்படையணி’ என்ற பெயரில் மக்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து அச்சுறுத்தல் விடுக்கின்றமை வரை அனைத்துவகையான உத்திகளையும் அரச தரப்பு பயன்படுத்திபார்க்கின்றது.
தனது தோல்வி நிலைமையை உணர்ந்துள்ள அரசாங்கம், தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமோக வெற்றியை குழப்புவதற்கு முனையக் கூடும். எனவே தமிழ் பேசும் மக்கள் யாவரும் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய தார்மீகக் கடமையாகும்.
அதேவேளை அரச தரப்பினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் அத்துமீறல்களை நிறுத்தி, நீதியான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்மந்தன், ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், தேர்தல் அத்தியேட்சகர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் இன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக