வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டால் மொத்தம் 13 உறுப்பினர்கள் கிடைக்கும்.THINAKATHJIR
அண்மைக்கால தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் என அனைத்து தரப்பிற்குமே சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.

இத்தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கூறுகிறது. சர்வதேசம் இத்தேர்தலை மிக உற்றுநோக்குகிறது. கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூறிவருகிறது.
ஆகவே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த தேர்தலாகவும் கிழக்கு மாகாணசபை தேர்தல் அமைந்துள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் தமது பக்கம் தான் என நிரூபிக்க வேண்டிய நிலையில் இலங்கையில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நிரூபிக்க வேண்டிய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், கிழக்கில் முஸ்லீம் மக்கள் தமது பக்கமே என நிரூபிக்க வேண்டிய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் உள்ளன.
இக்கட்சிகளுக்கு இத்தேர்தல் மிகப்பெரிய பலப்பரீட்சையும் கூட. பொதுத்தேர்தலில் இல்லாத அளவிற்கு கிழக்கில் தேர்தல் பிரசாரங்களும், சுழி ஓட்டங்களும் பலமாக காணப்படுகின்றன.  மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர் அமைப்புக்களும் இத்தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழர்கள் தனித்து நின்று வெற்றிபெற முடியாது, ஆளும் கட்சியுடன் சேர்ந்திருந்தால் தான் வெற்றி பெற முடியும் என ஆளும் கட்சியுடன் சேர்ந்திருக்கும் பிள்ளையான் குழுவும் கருணா குழுவும் பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்ற செய்தியை சொல்வதன் மூலம் கிழக்கில் பெரும்பான்மையான இருக்கும் தமிழர்கள் ஆட்சியை கைப்பற்ற முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மட்டுமே கிழக்கில் தமிழர்களால் ஆட்சி அமைக்க முடியும் என அக்கட்சி கூறுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற முடியுமா? ஆளும் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்புண்டா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கிழக்கு மாகாண தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழ் கட்சிக்கு வாக்களிக்காது ஏனைய கட்சிகளுக்கு வாக்களிப்பதால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றியும் கடந்த கால அனுபவங்கள் கூடாக பார்ப்போம்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தவர்களும் சமமாக வாழ்வதாக அரச தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டாலும் அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்களும் இரண்டாம் நிலையில் முஸ்லீம்களும் மூன்றாம் நிலையில் சிங்களவர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 4இலட்சத்து 13ஆயிரத்து 505 தமிழ் வாக்காளர்களும், 3இலட்சத்து 82ஆயிரத்து 669 முஸ்லீம் வாக்காளர்களும் 2இலட்சத்து 32ஆயிரத்து 452 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 40வீதமும், முஸ்லீம்கள் 38வீதமும், சிங்களவர்கள் 22வீதமும் உள்ளனர். ஆனால் இம்மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிப்பது அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விடுவதால் தமக்கு கிடைக்க வேண்டிய உறுப்புரிமைகளை தமிழர்கள் காலத்து காலம் இழந்தே வந்திருக்கிறார்கள்.
உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் 40வீதமுள்ள தமிழர்களிலிருந்து 5 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்கள். 38வீதமுள்ள முஸ்லீம்கள் 6 உறுப்பினர்களை தெரிவு செய்தார்கள். 22வீதமுள்ள சிங்களவர்கள் 5உறுப்பினர்களை தெரிவு செய்தார்கள். இதில் யார் முட்டாள்கள்? இதில் தமது உறுப்பினர்களை அதிகரிக்கும் சாதுரியத்தை கொண்டவர்கள் யார் என்பதை கீழே உள்ள வாக்களிப்பு புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கைப்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிலிருந்து தெரிவாக வேண்டும். ஆனால் 8பேர் மட்டும் தான் தெரிவு செய்யப்பட்டார்கள். அந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் யார் பறித்துக்கொண்டார்கள் அல்லது யாருக்கு தமிழர்கள் தாரை வார்த்துக்கொடுத்தார்கள் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு புரியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2இலட்சத்து 55ஆயிரத்து 115 தமிழ்வாக்காளர்களும் 89ஆயிரத்து 635முஸ்லீம் வாக்காளர்களும், 1600 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர். தமிழர்களின் வாக்காளர் வீதம் 76ஆகும். முஸ்லீம்களின் வாக்காளர் வீதம் 24ஆகும். இந்த வாக்கு வீதப்படி தமிழர்கள் நான்கு பேரும் முஸ்லீம் ஒருவருமே தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமிழர்கள் வாக்களித்ததால் அக்கட்சியிலிருந்து முஸ்லீம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேலும் 4ஆயிரம் வாக்குகளை தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளித்திருந்தால் 76 வீதமுள்ள தமிழர்கள் ஒரு உறுப்பினரையும் 24வீதமுள்ள முஸ்லீம்கள் 4 உறுப்பினர்களையும் பெற்றிருப்பார்கள். இது முஸ்லீம்களின் தவறல்ல. தமிழர்களின் முட்டாள்தனம். அறியாமை, சில ஆசை வார்த்தைகளுக்கும் எலும்புத்துண்டுகளுக்கும் பின்னால் செல்லும் பிற்போக்குத்தனத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்ததன் அபாயம் இதுதான். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் இந்த அபாயத்தை தமிழர்கள் தொடர்ந்து சந்திக்கத்தான் போகிறார்கள்.
நடைபெற இருக்கும் மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் அதிலிருந்து ஒரு தமிழ் உறுப்பினர் கூட தெரிவாகப்போவதில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மாகாணசபை தேர்தலில் 3 அல்லது 4 உறுப்பினர்கள் கிடைக்கலாம். மூன்று உறுப்பினர்கள் தெரிவானால் ஹிஸ்புல்லாவின் அகில இலங்கை மக்கள் காங்கிரஷின் மூன்று உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் சராசரியாக 30ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை ஒவ்வொருவரும் பெறுவார்கள். ஆளும் கட்சியில் போட்டியிடும் பிள்ளையானோ அல்லது கருணாவின் அக்காவோ 30ஆயிரம் விருப்புவாக்குகளை ஒருபோதும் பெற முடியாது. பிள்ளையான் போன்றவர்களால் ஆகக்கூடியது 10ஆயிரத்திற்கு மேல் விரும்பு வாக்கு பெற முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நான்காவது உறுப்பினராக அலிசாகிர் மௌலானா என்ற முஸ்லீம் உறுப்பினரே இருப்பார். அலிசாகிர் மௌலான பெறும் விரும்பு வாக்கு அளவிற்கு பிள்ளையான் கருணா தரப்பால் பெற முடியாது.
பிள்ளையான் அல்லது கருணாவின் அக்கா 35ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்புவாக்குகளை பெற்று உலக சாதனை ஒன்றை படைத்தால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழர் ஒருவர் உறுப்பினராக வரமுடியும்.
மாகாணசபை தேர்தல் முடிவு மட்டக்களப்பு தமிழர்களுக்கு இன்னொரு படிப்பினையையும் தரப்போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 6 உறுப்பினர்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை கூடினால் சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 உறுப்பினர்களை மட்டும் பெறலாம். அப்படி பெற்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஆகிய கட்சிகளிலிருந்து மொத்தம் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள்.
76வீதமுள்ள தமிழர்கள் 5 உறுப்பினர்களையும், 24 வீதமுள்ள முஸ்லீம்கள் 6 உறுப்பினர்களையும் பெறுவார்கள். மட்டக்களப்பில் உள்ள தமிழர்கள் முட்டாள்தனமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கூடிய வாக்குகளை பெற்ற கட்சியாக முதலாவது இடத்திற்கு வரும் என்பது உறுதி. ஆனால் அது அல்ல முக்கியம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய 8 உறுப்பினர்களையும் பெறக் கூடிய அளவிற்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ தமிழர்கள் வாக்களித்தால் அவர்கள் தங்கள் தலையில் தாங்களே நெருப்பை வைக்கும் செயலாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் 88ஆயிரத்து 607 தமிழ் வாக்காளர்களும், 83ஆயிரத்து 684 முஸ்லீம் வாக்காளர்களும், 73ஆயிரத்து 839 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59784 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி ( ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ்) 39691 வாக்குகளையும், தமிழரசுக்கட்சி 33268 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தது. 88ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் இருந்த போதிலும் தமிழரசுக்கட்சி சுமார் 33ஆயிரம் வாக்குகளை மட்டுமே மூன்றாம் இடத்திற்கு வந்ததற்கு காரணம் தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்தாகும். திருகோணமலையில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய இரு தமிழர்களும், ஒரு முஸ்லீமும், ஒரு சிங்களவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் பெரும் சிரமத்தின் மத்தியில் மூன்றாம் இடத்திற்கு வந்து ஒரு உறுப்பினரை மட்டும் பெற முடிந்திருக்கிறது. முஸ்லீம்கள்  ஒரு  உறுப்பினர்களை பெற்றுக்கொண்டார்கள். சிங்களவர்கள்  இரு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டார்கள்.
இம்முறை மாகாணசபை தேர்தலில் திருகோணமலை மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் திருகோணமலையில் ஆகக்கூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும். தெரிவு செய்யப்படும் 10 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் அல்லது 4 உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 2,09,350 முஸ்லீம் வாக்காளர்களும், 1,57,013 சிங்கள வாக்காளர்களும், 69,783 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் 14 உறுப்பினர்களில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய 3 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது முஸ்லீம் காங்கிரஷ் ஆகிய கட்சிகளே முதலாம் இரண்டாம் இடங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. 3ஆம் இடத்திற்கு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வரமுடியும். எனினும் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் 3 உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலகுவாக வெற்றிபெறும் நிலை காணப்படுகிறது. திருகோணமலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டால் மொத்தம் 13 உறுப்பினர்கள் கிடைக்கும். இம்முறை கிழக்கு மாகாணசபை தேர்தலில் 13 உறுப்பினர்களுக்கு மேல் எந்த ஒரு கட்சியும் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அம்பாறை மாவட்டத்தில் 6 அல்லது 5 உறுப்பினர்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 3 உறுப்பினர்களையுமாக மொத்தம் 12 உறுப்பினர்களை மட்டுமே பெறக் கூடிய வாய்ப்பு உண்டு.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் அம்பாறை மாவட்டத்தில் 4 உறுப்பினர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 3 உறுப்பினர்களையுமாக 9 உறுப்பினர்களை மட்டுமே பெறக் கூடிய நிலை காணப்படுகிறது.
ஐக்கிய தேசியக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஒரு உறுப்பினரை பெற கூடும்.
கிழக்கு மாகாணசபையில் 35 தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களும் ஆகக்கூடிய ஆசனங்களை பெறும் கட்சிக்கு இரு ஆசனங்களுமாக 37பேர் அங்கம் வகிப்பர்.
இன்னொரு விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். தேர்தல் முடிந்ததன் பின்னர் இரு கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற செய்திகளும் வெளியாகியிருந்தன. மாகாணசபையில் அறுதி  பெரும்பான்மையை காட்டி ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மாகாணசபை சட்டப்படி எந்த கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருக்கிறதோ அந்த கட்சியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநரால் அழைக்க முடியும்.
உதாரணமாக 1994ஆம் ஆண்டு மேல் மாகாணசபையில் சந்திரிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே கூடிய ஆசனங்களை பெற்றிருந்தது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு இருக்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி உட்பட ஏனைய கட்சிகளிடம் கூடிய ஆசனங்கள் இருந்த போதிலும் அப்போது ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி இருந்த போதிலும் சந்திரிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே ஆட்சி அமைத்தது. அதன் ஆயுள்காலம் முடியும்வரை அக்கட்சி ஆட்சியில் இருந்தது.
மாகாணசபை சட்டத்தின் படி முதலமைச்சர் சபை கலைக்குமாறு கோரினால் அல்லது முதலமைச்சரால் சபையை கொண்டு நடத்த முடியாமல் வெளியேறினால் மட்டுமே அரசுத்தலைவரால் மாகாணசபை கலைக்க முடியும்.
அதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபை தேர்தல் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற போது செழியன் பேரின்பநாயகம் தலைமையிலான சுயேச்சை குழு 9 உறுப்பினர்களை மட்டும் பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக்கட்சி 7 உறுப்பினர்களையும், ஈரோஸ் சுயேச்சை குழு, இராணுவ புலனாய்வு பிரிவு நியமித்த சுயேச்சை குழு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலா ஒவ்வொரு உறுப்பினர்களையுமாக மொத்தம் 10 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தன. ஆனாலும் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்ற செழியன் பேரின்பநாயகம் தலைமையிலான சுயேச்சை குழுவே ஆட்சி அமைத்து கொண்டது.
எனவே தேர்தல் முடிந்தபின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்ற பிரசாரம் மாகாணசபை சட்டத்திற்கு ஏற்புடையதல்ல. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கூடிய ஆசனங்களை பெற்றால் மட்டுமே அவர்களால் ஆட்சியமைக்க முடியும்.
கிழக்கு மாகாண தமிழர்கள் தமது உரிமையை நிலைநாட்டி தமது கையில் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடைய முடியும்.
ஆனால் தமிழ் மக்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர்களின் கையை விட்டு கிழக்கு மாகாணம் பறிபோய்விடும்.
இரா.துரைரத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக