வியாழன், 6 செப்டம்பர், 2012

சிவகாசி வெடி விபத்து குறித்து நீதி விசாரணை, அரசு மருத்துவமனை தீக்காய உயர்சிகிச்சை மையமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் மாவட்டம், முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் 

பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று (5.9.2012) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 38 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் நான் அறிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல மூத்த அமைச்சர்களை அனுப்பி வைத்ததோடு, காயமடைந்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் 55 பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டிருந்தேன்.

இந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இன்று எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேற்படி தொழிற்சாலைக்கு நாக்பூரில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி 2006 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். மேற்படி ஆலையை கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி ஆய்வு செய்த சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குநர், அங்கு அளவுக்கு அதிகமான ரசாயனப் பொருட்கள் இருப்பு; அளவுக்கு அதிகமான பணியாளர்கள்; பாதுகாப்புக்காக விடப்பட வேண்டிய இடங்களில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விதிமீறல்களைச் சுட்டிக்காட்டி, மேற்படி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை 4.9.2012 அன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவின் நகல் 5.9.2012 மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரால் பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விரிவான விவாதத்திற்கு பிறகு, கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 

1. 4.9.2012 அன்று இந்த பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், 5.9.2012 அன்று மேற்படி பட்டாசுத் தொழிற்சாலை இயங்கியது குறித்தும், இந்த விபத்திற்கான காரணம் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். 

2. சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவு மேம்படுத்தப்பட ஏற்கெனவே எனது அரசால் 1 கோடியே 13 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவினை மேலும் வலுப்படுத்தும் விதமாக தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம்,  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, இயன்முறை மருத்துவம் , மறுவாழ்வுப் பிரிவு ஆகியவற்றை  ஏற்படுத்திடவும், தற்போதுள்ள 30 படுக்கைகளுடன் கூடுதலாக மேலும் 30 படுக்கைகளை ஏற்படுத்திடவும்; தீக்காயப் பிரிவினை உயர் சிகிச்சை மையமாக மாற்றி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 

3. இதுபோன்ற வெடிவிபத்து துயரச் சம்பவங்கள் இனி நிகழ்வதை தடுக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளையும் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.   

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக