வியாழன், 6 செப்டம்பர், 2012

கிழக்கில் நீதியான தேர்தலை உடனடியாக உறுதிப்படித்துக; அரசின் வன்முறை குறித்து சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி
நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்களைப் பட்டியலிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சம்பந்தன், நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் இந்த விடயங்களைக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
 
(அ) ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயணித்த வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. 
 
(ஆ) ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்காகத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர்,  தம்மைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட குறிப்பிட்ட சிலரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
 
அதேவேளை, தேர்தல்களுக்குப் பின்னர் மோசமான பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் இவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
 
(இ) "நீலப்படையினர்' என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட சிலர் வாக்காளர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர்; அவற்றைப் பரிசீலனை செய்துள்ளனர். பின்னர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்காவிட்டால் பாரதூரமான பின்விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 
 
(ஈ) ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பட்டியலில்  இடம்பெற்று பல்வேறு மாவட்டங்களில் பலர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாவட்டங்களிலேயே பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அல்லது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இல்லையேல் செயற்படத் தொடங்கியுள்ளன. 
 
(உ) தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சிலவேளைகளில் அரச கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட அவர்களின் சுதந்திரமான சம்மதமின்றி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 
 
இத்தகைய நடவடிக்கைகள், சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் இடம்பெறுமா என்ற விடயத்தில் கடூரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. 
 
அறிந்த விடயங்கள் வருமாறு:
(i) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க முன்வருவோரின் மனோதிடத்தைக் குழப்பியடித்து திசைமாறச் செய்வதற்கான காரியங்கள் நடைபெறலாம். 
 
(ii) வாக்குப் பதிவு மாற்றியமைக்கப்படலாம். 
 
(iii) கணக்கெடுப்பு மாற்றியமைக்கப்படலாம். 
 
அரசமைப்பின் 17ஆவது திருத்தம்,
 
(அ) தேர்தல் ஆணையம்,
(ஆ) அரச சேவைகள் ஆணைக்குழு,
(இ) பொலிஸ் சேவை ஆணைக்குழு
 
ஆகியவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தொடர்ந்து செய்யப்படும் என்பதற்கு குந்தகமாகவே உள்ளது. 
இந்த அமைப்புகள் நேர்மையான ஜனநாயக முன்னெடுப்புகளை தடம் புரளச் செய்யவும், சட்டபூர்வமான தேர்தல் தீர்ப்பை திரிபுபடுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது. 
 
இத்தகைய சூழ்நிலை ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல. சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தத்தையும் இது இறுக்கப்படுத்த ஏதுவாகிவிடும். 
 
அத்துடன், ஜனநாயக முன்னெடுப்புகளில் ஒரு நாடு கொண்டுள்ள நம்பிக்கையையும் ஈடுகட்ட முடியாதவாறு சிதைத்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், இந்நாட்டின் தலைமையையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையையும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்துகின்றேன். 
 
கிழக்கு மாகாணத்தில் நேர்மையானதும் நியாயமானதுமான தேர்தல்களே நடைபெறவேண்டும். இது இத்தலைமையின் கடமை என்பதை இத்தருணத்தில் குறிப்பிடுகின்றேன் என்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக