அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சால் தடுமாறினர். நேர்த்தியாகப் பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்களை சமாளிக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. வார்னர் 22 ஓட்டங்களும், அணித்தலைவர் பெய்லி 14 ஓட்டங்களும், ஒயிட் 15 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் தன்வீர் 3 விக்கெட்டும், அஜ்மல், ஹபீஸ், ராசா ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். டி20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 2005ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் 79 ஓட்டங்களில் சுருண்டதே டி20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதனையடுத்து 90 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கம்ரான் அக்மல் அதிகபட்சமாக 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மொகமது ஹபிஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக